கோலிவுட்டின் இப்போதைய பரபரப்பான இயக்குநர் பாண்டிராஜ்தான். தொடர்ந்து
வெற்றிப்படங்களைக் கொடுத்த இவர், இப்போது மேலும் பரபரப்பாக காரணம் சிம்பு -
நயன்தாரா. நீண்ட காலமாக பிரிந்திருந்த சிம்புவும் நயன்தாராவும் தன்
படத்தில் இணைந்து நடிக்கப் போகிறார்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில்
அவர் அறிவிக்க ஒட்டுமொத்த தமிழகமும் அவரைத் திரும்பிப் பார்த்தது. “இதை
எப்படி சாதித்தார்” என்று எல்லோருக்கும் வியப்பு. அந்த வியப்பையே முதல்
கேள்வியாக்கி அவரைச் சந்தித்தோம்.
சிம்பு, நயன்தாரா உங்கள் படத்தில் நடிக்க எப்படி சம்மதித்தார்கள்?
இதைப்பற்றி நிறைய பேசிவிட்டேன். சிம்பு படத்தை நான் இயக்குவதாக
ஒப்புக்கொண்ட அடுத்த நாளிலிருந்தே நாயகியை தேடிக் கொண்டிருந்தோம். இந்தப்
படம் சிட்டி, ஐ.டி துறை சார்ந்த களம். படக்குழுவினரோடு
பேசிக்கொண்டிருந்தபோது இதில் நாயகியாக நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்கும்
என்று பேச்சு எழுந்தது. அவரிடம் பேசியபோது முதலில் கொஞ்சம் யோசித்தார்.
பிறகு கதை, சூழல் பிடித்திருக்கவே சம்மதம் தெரிவித்தார். படத்தின் முதல்
ஷெட்யூல் முடிந்துவிட்டது. இதில் சிம்பு, சூரி சேர்ந்து கலக்கியிருக்கும்
காமெடி காட்சிகளை எடுத்துள்ளோம். டிசம்பர் மாதத்தில் நயன் தாரா, சிம்பு
நடிக்கும் காட்சிகளை படமாக்க திட்டமிட்டிருக்கிறோம்.
சிம்பு, சூரி புதுக்கூட்டணி எப்படி இருக்கிறது?
முழுக்க நகர வாழ்க்கையைப் பேசும் படம். நான் பார்த்த, ரசித்த விஷயங்களை
நிறைய சேர்த்திருக்கேன். சிம்பு, சூரி, நான் உட்பட எல்லோருக்குக்குமே
வேறொரு இமேஜை இந்தப் படம் கொடுக்கும். கேமராமேன் பாலசுப்ரமணியம்
கலர்ஃபுல்லாக எடுத்திருக் கிறார். படப்பிடிப்பின்போது சூரி, ‘‘ இவ்வளவு
காஸ்ட்லியான சர்ட், பேண்டா? பொதுவா எனக்கு ஒரு கைலியும், டி-சர்ட்டும்
கொடுத்து ஏமாத்திடுவாங்களே. இப்போதான் புரமோஷன் கிடைச்சிருக்கு!’’ என்று
சிரித் தார். அந்த அளவுக்கு அவரை மாற்றிக் காட்டியிருக்கிறோம்.
எல்லோருக்கும் நம்பிக்கை கொடுக்கும் படமாக இது வளர்ந்துகொண்டிருக்கிறது.
சாதாரண மனிதர்களை, இயல்பான இடங்களை அழகா படமாக்குறீங்களே?
படம் பார்க்குறவங்க அவங்களோட வாழ்க்கையில், கதை ஒன்றி வருகிற மாதிரி இருக்க
வேண்டும் என்று நினைப் பேன். இப்படியும் கூட நடக்குமா என்று கேள்வியையோ,
சந்தேகத்தையோ எழுப்பக் கூடாது. பார்த்த, கேள்விப்பட்ட படித்த சம்பவங்கள் -
இதுதான் என் கதை. இப்போது நாம் பேசிக்கொண்டிருக்கும் போதே ஏதாவது ஒரு
வார்த்தை விடும்போது அதை நீங்கள் ரசித்தால், உடனே
குறிப்பெடுத்துக்கொள்வேன். எங்காவது ஒரு இடத்தில் அது கதையில்
ஒட்டிக்கொள்ளும்.
ஒரு நல்ல இயக்குநர், தயாரிப்பாளராகவோ நடிகராகவோ பரிணமிக்கும்போது கிரியேட்டி விட்டி பாதிக்கப்படும் என்கிறார்களே?
ஒரு விதத்தில் இது உண்மைதான். இயக்குநரே, தயாரிப்பாளராக இருப்பதில் நல்ல
விஷயங்களும் இருக்கிறது. போராட்டம், பணத்தின் மதிப்பு எல்லாவற்றி லும்
கூடுதல் கவனம் செலுத்த முடி கிறது. அதேபோல, எடுத்த ஒரு சீன் பிடிக்கவில்லை
என்றால், மீண்டும் அதிக சிரமத்தைக் கொண்டு படம்பிடிக்கலாம். இதே,
தயாரிப்பாளர் வேறொருவராக இருக்கும்போது அதை விளக்கமாக சொல்ல வேண்டிய சூழல்
ஏற்படும். தயாரிப்பாளரின் கஷ்ட நஷ்டங்களை தெரிந்துகொள்ளவாவது ஒரு படத்தில்
இயக்குநரே தயாரிப்பாளராக இருந்துவிட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
மீண்டும் ‘பசங்க’ மாதிரியான படம் எடுப்பீர்களா?
கண்டிப்பாக எடுப்பேன். கிராமத்து குழந்தைகளை மையமாக வைத்து கதை சொன்னது
போல, முழுக்க நகரத்து குழந்தைகளை வைத்து படம் பண்ண ஆசை இருக்கிறது. ஒரு
பெரிய ஹீரோ படம், அடுத்து ஒரு பசங்க படம் என்று மாறி மாறி பண்ண வேண்டும்
என்பதுதான் என் ஆசை. பார்க்கலாம்.
மோசடி, பிரச்னை என்று உங்களை சுற்றி அவ்வப்போது ஏதாவது சுழல்கிறதே?
சிலருக்கு உழைக்க கஷ்டமா இருக்கு. ஓடும் குதிரையில் பயணிக்க
விருப்பப்படுகிறார்கள். இங்கே பிச்சைக் காரர்கள் குறைவு. காஸ்ட்லி
பிச்சைக்காரர்கள் அதிகம். அவர்களால் உண்டாகும் இடை யூறுகள் இவை. அதை நான்
ஒரு பொருட்டாக கருதுவதில்லை.
குடும்பம், குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க முடிகிறதா?
சில நாட்களுக்கு முன் சினிமா விழாவில் கலந்துகொண்டு வெளிநாடு சென்று
திரும்பிய போது, என் மனைவி வசந்திக்கு ஒரு தங்க நகை வாங்கிக்கொண்டு வந்து
கொடுத்தேன். ‘இதெல்லாம் எதற்கு, என்னோடும், குழந்தைகளோடும் 3 மணி நேரம்
இருங்க. அதுதான் சர்ப்ரைஸ்!’ என்றார். அப்போது எனக்கு எதுவுமே பேசத் தோணல.
‘கொஞ்ச நாட்கள் பொறுத்திரு. எனக்கும் ஒரு என்ட் கார்டு வரும். சினிமாவில்
நானும் ஒரு நாள் ஓய்வு பெற்றுவிடுவேன். அப்போது நீயே வேலைக்கு போ
என்றாலும், என்னால் போக முடியாது. அப்போது உங்களுடன் செலவழிக்கிறேன்’ என்று
சொல்லி ஆறுதல் படுத்தினேன். இப்போது குடும்பத்தை பொறுத்தவரைக்கும் நான்
குற்றவாளியாகவே இருக்கிறேன்.
இந்த பயணம் எப்படி இருக்கிறது?
இப்போதும் அடிக்கடி ஊருக்கு போய் வருகிறேன். எனக்குப் பிடித்ததே அதுதான்.
கையெழுத்து போடத்தெரியாத அப்பா, கைரேகை வைக்கத்தெரியாத அம்மா, எந்த
அடிப்படை வசதிகளும் இல்லாத கிராமத்திலிருந்து வந்து அடைந்திருக்கும் இந்த
இடத்தை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு தானே ஆகணும். என்னமோ தெரியலை, உதவி
இயக்குநராக இருந்தபோது வாங்கிய 3000 சம்பளம் கொடுத்த திருப்தி, இப்போது
லட்சங்களைப் பார்க்கும்போது இல்லை. அதேபோல, இப்போ வரைக்கும் ஒரு இயக்குநரா
பொழுதுபோக்குக்கான படங்களைத்தான் இயக்கியிருப்பதாக நினைக்கிறேன். இன்னும்
மனதுக்குப் பிடித்த படமும் கொடுக்கவில்லை. அதை செய்யும் வரைக்கும் இந்தப்
பயணம் தொடரும்.
Source : The Hindu Tamil